ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
N.F.Rifka
admin
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா உள்ளிட்ட நிரந்தரத் தீர்வுகளை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று (15.02.2026) எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், மனிதாபிமான அடிப்படையிலும், அரசியல் அமைப்பு மற்றும் நாட்டு நலன் கருதியும் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
நீண்ட கால உறவு: 1983-ம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாகத் தஞ்சம் புகுந்த சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ளனர். குறிப்பாக, இவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட ரீதியான சிக்கல்கள்: இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து, சமூகத்துடன் ஒன்றிணைந்திருந்தாலும், அவர்களுக்கு இதுவரை குடியுரிமையோ அல்லது நிரந்தரத் தீர்வோ கிடைக்கவில்லை. 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இவர்களை "சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" (Illegal Migrants) என வகைப்படுத்தியது பெரும் பின்னடைவாக உள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிந்துரை: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையின்படி, 30.06.1987-க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள், இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்தியரைத் மணந்தவர்கள் போன்ற பிரிவினருக்குக் குடியுரிமை வழங்கத் தகுதியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கை: 2015-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த இலங்கைத் தமிழர்களை "சட்டவிரோதக் குடியேறிகள்" எனக் கருதக்கூடாது என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், அண்மையில் வெளியான குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025 (Immigration and Foreigners (Exemption) Order, 2025)-ன் படியும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் (பி. உலகநாதன் வழக்கு) மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான குடியுரிமைப் பிரச்சினையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

