ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவலம்: வாடகை செலுத்தாததால் ஹோட்டலில் இருந்து வெளியேற்றம் - 13 மணி நேரம் வீதியில் தவித்த வீரர்கள்!
24 Tamil News
reporter

சிட்னி: சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணிக்கு, அங்கு மிக மோசமான அனுபவம் நேர்ந்துள்ளது. அந்நாட்டு ஹாக்கி வாரியத்தின் நிதி நெருக்கடி காரணமாக, வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டு, நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹோட்டலில் இருந்து வெளியேற்றம்: பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம், அறை வாடகையைச் செலுத்துமாறு பலமுறை அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் பணத்தைச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பணம் செலுத்தப்படாததால், ஹோட்டல் நிர்வாகம் அதிரடியாக வீரர்களை அறையை விட்டு வெளியேற்றியது.
வீதியில் படுத்த வீரர்கள்: தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி, பாகிஸ்தான் தேசிய அணி வீரர்கள் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையோரம் தங்கள் உடைமைகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டின் தேசிய அணியைச் சேர்ந்த வீரர்கள், அந்நிய மண்ணில் இதுபோன்று வீதியில் படுத்துக் கிடந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாத்திரம் கழுவிய அவலம்: நிதிப் பற்றாக்குறை காரணமாக அணியின் உணவுத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளப் போதுமான ஊழியர்கள் இல்லாததால், வீரர்கள் தாங்கள் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாங்களே கழுவி சுத்தம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ஹாக்கி வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதையே இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
