24 Tamil News
மாநிலம்

கத்தியுடன் விரட்டிய இளைஞர்.. உயிருக்கு பயந்து ஓடிய காவலர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயிலில் ஷாக்

24 Tamil News

reporter

கத்தியுடன் விரட்டிய இளைஞர்.. உயிருக்கு பயந்து ஓடிய காவலர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயிலில் ஷாக்

திருப்பூர் மாவட்டம் வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு காரணமாகப் பெருந்திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர், திடீரெனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரைக் கத்தியுடன் துரத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாகச் சென்று, பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை! இதன் காரணமாகச் சொர்க்க வாசல் திறப்பு நாளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிவார்கள். அதன்படி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதன் காரணமாகக் காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தக் காவலரைத் தாக்க முயன்றுள்ளார். தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சில அடி தூரம் அந்த காவலர் ஓடிய நிலையில், அவரை அந்த மர்ம நபர் கத்தியோடு துரத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் தனது பெல்ட்டை கழட்டிக் கத்திக் குத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளார். அத்தனை பேர் திரண்டிருந்தபோதும், காவலரை அந்த நபர் கத்தியோடு துரத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் இணைந்து கத்தியுடன் இருந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. காவலரை அந்த நபர் கத்தியோடு துரத்திய நிலையில், அதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.